Fact Check: எரியும் தேவாலயம், கார் நிறுத்துமிடம் தீப்பிடித்து எரிவது போன்ற காணொளிகளுக்கு பிரான்ஸ் வன்முறையுடன் எந்தத் தொடர்பும் இல்லாதது
- By: Pallavi Mishra
- Published: Jul 15, 2023 at 01:11 PM
புதுடெல்லி விஸ்வாஸ் செய்திகள் – சமீபத்தில் பிரான்சில் நடந்த வன்முறையை அடுத்து, போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் ஒரு இளைஞன் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, சில காணொளிகள் சமூக ஊடக தளங்களில் வைரலாகி, பிரான்சில் நடந்து வரும் அமைதியின்மைக்கு அவற்றின் தொடர்பை பொய்யாகக் எடுத்துக்காட்டி வருகின்றன.
நாங்கள் இங்கு உண்மையைச் சரிபார்த்துக்கொண்டிருக்கும் இரண்டு காணொளிகளில் முதல் காணொளி தேவாலயம் தீப்பிடித்து எரிவதைக் காட்டுகிறது, இரண்டாவது காணொளியில் கார் நிறுத்துமிடம் (கார் பார்க்கிங் யார்டு) தீப்பிடித்து எரிவதைக் காட்டுகிறது. விஸ்வாஸ் நியூஸ் இந்த இரண்டு கூற்றுகளும் போலியானது என்று கண்டறிந்தது. முதல் காணொளி பிரான்சில் இருந்து வெளியானது ஆனால் பழையது, இரண்டாவது காணொளி ஆஸ்திரேலியாவில் இருந்து வெளியானது.
வைரல் இடுகையில் என்ன இருக்கிறது?
எரியும் தேவாலயத்தைக் காட்டும் காணொளியில் கூறப்பட்டுள்ளதாவது: “புகலிடம் கோரி பிரான்சுக்கு வந்து கொள்ளையடித்தல், தீவைத்தல் மற்றும் ஜிஹாத் என அனைத்தையும் செய்துகொண்டிருந்த சட்டவிரோத குடியேற்றவாசிகளின் அமைதியான சமூகத்தால், இரண்டு உலகப் போர்களின் போதும் குண்டுவீச்சுக்கு ஆளாகியும், நேற்று வரை பல நூறு ஆண்டுகளாக உயர்ந்து நிற்கும் ஒரு பேராலயம் (கதீட்ரல்) எரிக்கப்பட்டது. #FranceOnFire.”
இந்த காணொளி மற்றும் அதன் காப்பக இணைப்பை இங்கே காணலாம்.
கார் நிறுத்தும் இடத்தை (கார் யா்டை) காட்டும் காணொளியில் கூறப்பட்டுள்ளதாவது: “#பிரஞ்சு எதிர்ப்பாளர்கள் வாகன நிறுத்துமிடத்திற்கு தீ வைத்ததாக கூறப்படுகிறது. – இதோ, ஒரு வெற்றிகரமான ஜனநாயக நாடு – கனவு! #FranceRiots #FranceHasFallen #franceViolence #Frankreich #Francia #frankreichriots #franceViolence #FranceOnFire #FranceProtest #frenchriots #franceburning”
இந்த காணொளி மற்றும் அதன் காப்பக இணைப்பை இங்கே காணலாம்.
விசாரணை:
நாங்கள் இந்த இரண்டு உரிமைகோரல்களையும் தனித்தனியாக முழுமையாக ஆய்வு செய்தோம்.
முதலில், தேவாலயத்தை பற்றிய காணொளியை நாங்கள் ஆய்வு செய்தோம். நாங்கள் கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலைப் பயன்படுத்தி, ஸ்கை நியூஸ் என்ற பிரிட்டிஷ் செய்தி இணையதளத்தில் ஜூலை 19, 2020 அன்று வெளியிடப்பட்ட ஒரு செய்தி அறிக்கையைக் கண்டறிந்தோம். அந்த அறிக்கையின்படி, ஜூலை 19, 2020 அன்று தீப்பிடித்த 15 ஆம் நூற்றாண்டிலுள்ள நாண்டேஸின் கோதிக் பேராலயத்தை (கதீட்ரலை) இந்த காணொளி காட்டுகிறது.
விசாரணையில், பாரிஸைச் சேர்ந்த இம்மானுவேல் அபயிசெங்கா என்ற தன்னார்வலர் 15 ஆம் நூற்றாண்டின் கோதிக் பேராலயத்திற்கு தீ வைத்ததை உறுதிப்படுத்தும் பல ஊடக அறிக்கைகளை நாங்கள் கண்டோம், மேலும் மார்ச் 30, 2023 அன்று நடந்த விசாரணையின் போது தீ வைத்ததற்காக அவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அவரது வழக்கறிஞர்களின் கூற்றுப்படி, அவர் இதைச் செய்ததற்கான காரணம் நாடு கடத்தல் நோட்டீஸ் தொடர்பானது.
அடுத்து, நாங்கள் இரண்டாவது காணொளியை ஆய்வு செய்தோம்.
நாங்கள் கூகுள் ரிவர்ஸ் இமேஜை பயன்படுத்தி, பல செய்தி நிறுவனங்களின் யூடியூப் சேனல்களில் முழு காணொளியையும் கண்டோம். ஏப்ரல் 29, 2023 அன்று ஸ்கை நியூஸ் ஆஸ்திரேலியாவின் யூடியூப் சேனலில் பதிவேற்றப்பட்ட காணொளியுடன் கூடிய விளக்கத்தின்படி, இந்த காணொளி, “கார்களை ஏலம் விடும் ஏலக் கூடத்தில் டசின் கணக்கான கார்கள் தீயில் எரிந்து நாசமான” ஆஸ்திரேலியாவின் பெர்த்தில் இருந்து வெளியானது.
ஏப்ரல் 29, 2023 அன்று ஆஸ்திரேலியாவின் பெர்த்தில் ஏலக் கூடத்தில் தீப்பிடித்தது என்ற அதே கூற்றுடன். செவன் நியூஸ் என்ற செய்தி தளமாகிய ஆஸ்திரேலியாவின் யூடியூப் சேனலில் இதே காணொளி காணப்பட்டது.
டெய்னிக் ஜாக்ரானில் சர்வதேச செய்திகளை உள்ளடக்கிய ஜே.பி. ரஞ்சன் என்ற பத்திரிக்கையாளரை நாங்கள் தொடர்பு கொண்டபோது, இந்த இரண்டு காணொளிகளும் பிரான்சில் நடந்து வரும் வன்முறைக்கு தொடர்பில்லாதவை என்பதை அவர் உறுதிப்படுத்தினார். பிரான்ஸில் இளைஞர் ஒருவர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து பதற்றம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. தகவல்களின்படி, வன்முறை குறைந்துவிட்டது, ஆனால் நிலைமை மிகவும் பதட்டமாக உள்ளது. இது தொடர்பான விரிவான தகவல்களை இந்த செய்தி அறிக்கையில் காணலாம்.
தேவாலயம் எரிந்து கொண்டிருக்கும் காணொளியை ‘அமிதாப் சவுத்ரி’ என்ற ட்விட்டர் பயனாளர் தவறான கூற்றுடன் பதிவேற்றினார். ட்விட்டரில் இந்த பயனருக்கு 6,000க்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்கள் உள்ளனர். இதேபோல், எரிந்து கொண்டிருக்கும் வாகனங்களின் காணொளியானது 3,000 க்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்களைக் கொண்ட ‘அடெமி ஆடம்ஸ்’ என்ற முகநூல் பயனரால் பகிரப்பட்டது.
முடிவுரை: ஒரு முழுமையான விசாரணைக்குப் பிறகு, இரண்டு கூற்றுகளும் தவறானவை என்று விஸ்வாஸ் நியூஸ் கண்டறிந்தது. முதல் காணொளி பிரான்சில் இருந்து வெளியானது ஆனால் பழைய சம்பவம், இரண்டாவது காணொளி ஆஸ்திரேலியாவில் இருந்து வெளியானது. பிரான்சின் தற்போதைய வன்முறைச் சூழலுக்கும் இந்த இரண்டு காணொளிகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
- Claim Review : பிரான்ஸ் வன்முறை தொடர்பான வீடியோக்கள்
- Claimed By : முகநூல் பயனர் Adeyemi Adams
- Fact Check : False
Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!
Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.