இந்த வைரல் பதிவு தவறானது. நாடார் சமூகத்தை உலகின் தொன்மையான இனமாக யுனெஸ்கோ அறிவிக்கவில்லை.
புது தில்லி (விஸ்வாஸ் செய்தி). சமூக ஊடகங்களில் பகிரப்படும் ஒரு வைரல் மீம், யுனெஸ்கோ நாடார் சமூகத்தை உலகின் தொன்மையான இனமாக அறிவித்ததாகக் கூறுகிறது.
இந்த கூற்று தவறானது என்று விஸ்வாஸ் செய்தியின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த வைரல் கூற்றினை யுனெஸ்கோவின் ஆசிரியர் மறுத்துள்ளார்.
கூற்று
நாடார் சமூகத்தை உலகின் தொன்மையான இனமாக யுனெஸ்கோ அறிவித்ததாகக் கூறி சான்றிதழ் கொண்ட ஒரு மீம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. “ஐநாவின் பாரம்பரிய மற்றும் தொல்பொருள் துறை அமைப்பான யுனெஸ்கோ நடத்திய ஆய்வில், உலகின் தொன்மையான மற்றும் நம்பிக்கையான இனமாக நம் நாடார் இனம் தேர்வு. நாடார் குலம் முதல் இடம் பிடித்தது. உலகில் உள்ள 3 லட்சத்துக்கும் மேலான ஜாதி, இன குழுக்களை ஆய்வு செய்து இந்த முடிவுக்கு வந்துள்ளனர். முதல் 10 இடங்களில் இந்தியாவிலுள்ள வேறெந்த ஜாதியும் இடம்பெறவில்லை. நம்பிக்கை, நாணயம், உழைப்பு, பிறருக்கு உதவுதல், தொன்மை, கலாச்சாரம் , பண்பாடு, பாரம்பரியம், பாசம், வீரம் முதலியவற்றில் உலகுக்கே முன்னோடி என புகழாரம்,” என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த கூற்றை முதலில் வாட்ஸ்அப்பிலும் பின்னர் பேஸ்புக்கிலும் நாங்கள் கண்டோம்.
விசாரணை
நாடார் சமூகம் மற்றும் யுனெஸ்கோ அறிவிப்பு பற்றிய செய்திகளை நாங்கள் இணையத்தில் தேடினோம். அவ்வாறு தேடியதில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் விருதுநகர் போன்ற தமிழகத்தின் தென் மாவட்டங்களில் நாடார் என்று ஒரு தமிழ் இனம் இருப்பதை எங்களால் அடையாளம் காண முடிந்தது. இருப்பினும், யுனெஸ்கோ இந்த குறிப்பிட்ட சமூகத்தை உலகின் மிகப் பழமையான இனம் என்று கூறிடும் எந்தவொரு நம்பகத்தன்மை கொண்ட அறிக்கையையும் எங்களால் காண முடியவில்லை.
இந்த வைரல் இடுகையில் சான்றிதழைக் கவனித்தபோது, ‘நாடார் – இந்தியா’ என்ற சொற்களின் எழுத்துருவின் பாணியும், அளவும் வேறுபட்டு இருப்பதை தெளிவாக எங்களால் காண முடிந்தது. சான்றிதழில் இருந்த ‘மத்திய ஆசியாவில் கண்ணுக்குத் தெரியாதவர்கள்’ என்ற சொற்களையும் அடையாளம் கண்டு, அவற்றை இணையத்தில் தேடினோம்.
அவ்வாறு தேடியதில், 20 பிப்ரவரி 2017 அன்று யுனெஸ்கோ அல்மாட்டி இணையதளத்தில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையில், “அல்மாட்டியில் உள்ள யுனெஸ்கோ கிளஸ்டர் அலுவலகமானது UNHCRன் (UNHCR ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான அமைப்பாகும்) ஒத்துழைப்புடனும் “துரான்” பல்கலைக்கழகம் மற்றும் அல்மாட்டியின் இளைஞர் கொள்கைக்கான அலுவலகத்தின் துணையுடனும், மத்திய ஆசியாவில் நிலவும் நிலையற்றதன்மை தொடர்பான பிரச்சினைகள் குறித்து தகவல் எழுத்தறிவை வளர்ப்பதற்காகவும், அந்த பிரச்சினைகளை எதிர்கொள்ளும் தகுதியை வளர்ப்பதற்காகவும் இளைஞர்களுக்கான மூன்று மணி நேர பயிற்சிப்பட்டறையை நடத்தியது,” என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் வைரல் சான்றிதழுடன் பொருந்தக்கூடிய பங்கேற்பாளரின் சான்றிதழின் நகலையும் அதில் எங்களால் காண முடிந்தது.
இவற்றைக் கொண்டு, 2017 பயிற்சிப்பட்டறையின் சான்றிதழ் திருத்தப்பட்டு, தவறான கூற்றுடன் பகிரப்பட்டுள்ளது என்பதை எங்களால் உறுதிப்படுத்த முடிந்தது. இதனைத் தெளிவுபடுத்துவதற்காக யுனெஸ்கோ பத்திரிகை சேவையின் ஆங்கில ஆசிரியர் ரோனி அமெலனை நாங்கள் தொடர்புகொண்டோம். “இந்த கூற்று முற்றிலும் ஆதாரமற்றது,” என்று கூறினார்.
இந்த வைரல் கூற்றைப் பகிர்ந்து கொண்ட பேஸ்புக் பயனர் குமார் சங்கரின் கணக்கினை ஆராய்ந்ததில், அவர் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பதும், பேஸ்புக்கில் அவருக்கு 4,941 நண்பர்கள் இருப்பதும் எங்களுக்குத் தெரியவந்தது.
निष्कर्ष: இந்த வைரல் பதிவு தவறானது. நாடார் சமூகத்தை உலகின் தொன்மையான இனமாக யுனெஸ்கோ அறிவிக்கவில்லை.
Knowing the truth is your right. If you have a doubt on any news that could impact you, society or the nation, let us know. You can share your doubts and send you news for fact verification on our mail ID contact@vishvasnews.com or whatsapp us on 9205270923