உண்மை சரிபார்ப்பு: தமிழகம் 40 மாவட்டங்களைக் கொண்டவுடன் இரண்டாக பிரிக்கப்படும் என்ற கூற்று தவறானது
இந்த வைரல் பதிவு தவறானது. மாநிலத்தைப் பிரிப்பது தொடர்பான முடிவுகளுக்குப் பொறுப்பான தமிழக அரசு வருவாய்த்துறை, இந்த வைரல் கூற்றுக்களை மறுத்துள்ளது. இந்தியாவில் 40க்கும் மேற்பட்ட மாவட்டங்களைக் கொண்ட பல மாநிலங்கள் உள்ளன.
- By: Abbinaya Kuzhanthaivel
- Published: Dec 30, 2020 at 09:16 PM
- Updated: Feb 2, 2021 at 08:18 PM
புது தில்லி (விஸ்வாஸ் செய்தி). தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி மயிலாடுதுறை மாவட்டத்தை தமிழ்நாட்டின் 38வது மாவட்டமாக அறிவித்த பின்னர், சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் ஒரு மீம், ஒரு மாநிலத்தில் 40 மாவட்டங்கள் இருந்தால், அம்மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்படும் என்று கூறுகிறது.
இந்த கூற்று தவறானது என்று விஸ்வாஸ் செய்தியின் விசாரணையில் தெரியவந்துள்ளது. மாநிலங்களைப் பிரிப்பது தொடர்பான முடிவுகளை எடுக்கக்கூடிய தமிழக அரசின் வருவாய்த்துறை இந்த வைரல் கூற்றுக்களை மறுத்துள்ளது.
கூற்று
புதிதாக உருவாக்கப்பட்ட தமிழ்நாட்டின் மயிலாடுதுறை மாவட்டத்தைப் பற்றிய செய்தியை கொண்டுள்ள ஒரு வைரல் மீம், “ஒரு மாநிலத்துல 40 மாவட்டங்கள் மேல இருந்தா அந்த மாநிலத்த ரெண்டா பிரிச்சிருவாங்க. இப்ப சொல்லுங்க இது நல்லதா கெட்டதா,” என்று கூறுகிறது. நாங்கள் இந்த மீமினை வாட்ஸ்அப்பில் கண்டறிந்தோம்.
விசாரணை
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த திங்கட்கிழமை அன்று புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மயிலாடுதுறை மாவட்டத்தை காணொலி வாயிலாகத் துவக்கி வைத்தார்.
கடந்த மார்ச் 24 ம் தேதி அன்று சட்டசபையில் விதி எண் 110 கீழ் நாகப்பட்டினம் மாவட்டத்திலிருந்து மயிலாடுதுறை மாவட்டத்தைப் பிரிப்பது குறித்து முதல்வர் அறிவித்ததாக டைம்ஸ் ஆப் இந்தியாவின் ஒரு கட்டுரை தெரிவிக்கிறது.
உத்தரபிரதேசம், மத்தியப் பிரதேசம் போன்ற பல மாநிலங்கள் 40க்கும் மேற்பட்ட மாவட்டங்களைக் கொண்டிருப்பதை நம்மால் காண முடிந்தது. மேலும் தமிழ்நாடு இரண்டாகப் பிரிக்கப்படுவது குறித்த அதிகாரப்பூர்வ அறிக்கையினையோ அல்லது 40 மாவட்டங்களைக் கொண்ட ஒரு மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்படும் என்று கூறும் விதிமுறையினையோ எங்களால் கண்டுபிடிக்க இயலவில்லை.
இது குறித்த உண்மை சரிபார்ப்பிற்காக மாநிலத்தைப் பிரிக்கும் முடிவுகளுக்குப் பொறுப்பினை கொண்டுள்ள தமிழக அரசின் வருவாய்த் துறையை நாங்கள் தொடர்பு கொண்டு பேசினோம். இது பற்றி நம்மிடத்தில் பேசிய கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் அதுல்யா மிஸ்ராவின் அலுவலக பொறுப்பாளர், இந்த வைரல் கூற்றுக்களை மறுத்தார். “இந்த வைரல் பதிவு தவறானது. சமூக ஊடகங்களில் பகிரப்படும் அனைத்தையும் மக்கள் நம்பக்கூடாது. ஒரு மாநிலத்தில் 40 மாவட்டங்கள் இருந்தால் அதைப் பிரிக்க வேண்டும் என்று எந்த விதியும் இல்லை,” என்று கூறினார்.
निष्कर्ष: இந்த வைரல் பதிவு தவறானது. மாநிலத்தைப் பிரிப்பது தொடர்பான முடிவுகளுக்குப் பொறுப்பான தமிழக அரசு வருவாய்த்துறை, இந்த வைரல் கூற்றுக்களை மறுத்துள்ளது. இந்தியாவில் 40க்கும் மேற்பட்ட மாவட்டங்களைக் கொண்ட பல மாநிலங்கள் உள்ளன.
- Claim Review : ஒரு மாநிலத்துல 40 மாவட்டங்கள் மேல இருந்தா அந்த மாநிலத்த ரெண்டா பிரிச்சிருவாங்க
- Claimed By : வாட்ஸ்அப்பில் பகிரப்பட்ட செய்தி
- Fact Check : False
Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!
Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.