உண்மை சரிபார்ப்பு: மின்னணு வாக்கு இயந்திரத்தில் மோசடி என பழைய காணொளி தவறான கூற்றுடன் வைரலாகிறது
இந்த வைரல் பதிவு தவறானது. பழுதுள்ள வாக்குப்பதிவு இயந்திரம் எனக் கூறும் காணொளி பழையது மற்றும் அது தற்போது நடைபெறும் பீகார் சட்டமன்றத் தேர்தலில் எடுக்கப்பட்டது அல்ல.
- By: Abhishek Parashar
- Published: Nov 2, 2020 at 11:46 PM
- Updated: Nov 2, 2020 at 11:50 PM
புது தில்லி (விஸ்வாஸ் செய்தி). பீகார் சட்டமன்றத் தேர்தலின் முதல் கட்டத்தையொட்டி, பழுதுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் (EVM) ஒரு காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த காணொளி தற்போது நடந்துகொண்டிருக்கும் தேர்தலின்போது எடுக்கப்பட்டதாக கூறப்பட்டு சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
இது குறித்த விஸ்வாஸ் செய்தியின் விசாரணையில் இந்த கூற்று தவறானது என்பதும், கடந்த ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தல் முதலே, நீண்ட காலமாக இந்த காணொளி சமூக ஊடகங்களில் வைரலாக இருப்பதும் எங்களுக்குத் தெரியவந்தது.
கூற்று
பழுதுள்ள மின்னணு வாக்கு இயந்திரம் ஒன்று இடம்பெறும் வைரல் காணொளியை (இணைப்பு) பகிர்ந்துள்ள பேஸ்புக் பயனரான எம்.டி.இம்தியாஸ், “முதல் கட்ட வாக்களிப்பில், மோசடி தொடங்கியது ..” என்று எழுதியுள்ளார். மேலும் அதில் யானை சின்னத்தை அழுத்தினால், தாமரை (BJP) சின்னதிற்கு வாக்கு விழுவது போல் இயந்திரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இதேபோன்ற கூற்றுடன் பல பயனர்களும் இதே காணொளியை பகிர்ந்துள்ளனர்.
விசாரணை
இது குறித்து விசாரிக்க, நாங்கள் முதலில் வைரல் காணொளியை இன்விட் கருவியில் பதிவேற்றி, கீஃப்ரேம்களைப் பிரித்தெடுத்தோம். பின்பு அவற்றை கூகுள் தலைகீழ் பட தேடல் கருவியைப் பயன்படுத்தி இணையத்தில் தேடினோம். அவ்வாறு தேடியதில், இந்த காணொளி கடந்த ஆண்டு முதல் பல சமூக ஊடக பயனர்களால் பகிரப்பட்டு இருப்பதை நாங்கள் கண்டோம்.
இதேபோன்ற காணொளி மே 21, 2019 அன்று ‘எதிர்கால பிரதமர் மாண்புமிகு சகோதரி குமாரி மாயாவதி ஜி ஜிந்தாபாத்’ என்ற பேஸ்புக் பக்கத்தில் இருந்து பதிவேற்றப்பட்டு இருப்பதையும் எங்களால் காண முடிந்தது.
இந்த சம்பவம் குறித்து , ஏப்ரல் 2019 இல் வெளியிடப்பட்ட செய்திகளையும் நாங்கள் கண்டோம். நவ்பாரத் டைம்ஸின் ஒரு கட்டுரையில் , “மின்னணு வாக்கு இயந்திரம் பழுதடைந்து உள்ளதாக புகார் கூறப்பட்டு, உ.பி. பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பாக தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. சில வாக்குச் சாவடிகளில், பகுஜன் சமாஜ் கட்சியின் சின்னமான யானையின் பொத்தானை அழுத்தினாலும் வாக்கு பாஜகவுக்கு விழுகிறது என்று பகுஜன் சமாஜ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது… பகுஜன் சமாஜ் கட்சியின் பொதுச் செயலாளர் சதீஷ் சந்திர மிஸ்ராவும் இந்த வாக்கு இயந்திரங்களின் காணொளி ஒன்றை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பியுள்ளார்,” என்று கூறப்பட்டுள்ளது.
இந்த வைரல் காணொளி பழையது என்பதையும், தற்போதைய பீகார் சட்டமன்றத் தேர்தலுடன் தொடர்புடையது அல்ல என்பதையும் எங்களால் உறுதிப்படுத்த முடிந்தது. பீகார் சட்டமன்றத் தேர்தல் 3 கட்டங்களாக நடைபெறுகிறது, முதல் கட்டம் அக்டோபர் 28 ஆம் தேதி தொடங்கியது. இரண்டாம் கட்டமும், மூன்றாம் கட்டமும் முறையே நவம்பர் 3 மற்றும் 7 ஆம் தேதிகளில் திட்டமிடப்பட்டுள்ளது.
இது குறித்த விசாரணைக்காக இந்த காணொளியை நாங்கள் கவனித்ததில், அந்த இயந்திரத்தில் ஒட்டப்பட்டிருந்த பட்டியலில் இருந்த கட்சி மற்றும் வேட்பாளர்களின் பெயர்களை நாங்கள் அடையாளம் கண்டோம் (இந்திய தேசிய காங்கிரஸை சேர்ந்த ராஜ் கிஷோர் சிங், பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த ராம் பிரசாத் சவுத்ரி மற்றும் பாஜகவைச் சேர்ந்த ஹரிஷ் திவேதி).
இந்தச் சொற்களைக் கொண்டு இணையத்தில் தேடியதில், டைனிக் ஜாக்ரானில் வெளியிடப்பட்ட செய்தி கட்டுரையின் இணைப்பைக் கண்டோம். இந்த வேட்பாளர்கள் உத்தரபிரதேசத்தின் பஸ்டியில் 2019 மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டதாக அந்த கட்டுரை கூறியது.
எட்டு விநாடி நீளமுள்ள இந்த வைரல் காணொளியில், இரு விரல்கள் ஒரே நேரத்தில் இரண்டு பொத்தான்களை அழுத்துவதை நம்மால் காண முடிகிறது. முதல் விரல் பகுஜன் சமாஜ் கட்சியின் சின்னத்தின் பொத்தானையும், இரண்டாவது விரல் பாஜகவின் சின்னத்தின் பொத்தானையும் அழுத்துகிறது. யாராவது வேண்டுமென்றே ஒரே நேரத்தில் இரண்டு பொத்தான்களையும் அழுத்தும் சாத்தியம் உள்ளது என்பதை இதன்மூலம் நாம் புரிந்து கொள்ள முடிகிறது, அதே முடிவையே அந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரமும் காட்டுகிறது.
இந்த காணொளியை சரிபார்க்க நாங்கள் பஸ்டியின் உதவி தேர்தல் அதிகாரி அருண்குமார் சிங்கை தொடர்பு கொண்டோம். இது குறித்து நம்மிடத்தில் பேசிய அவர், “இதுபோன்ற எந்த சம்பவமும் எங்கள் கவனத்திற்கு வரவில்லை. கடந்த மக்களவைத் தேர்தலில், பழுதுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து பல வழக்குகள் பதிவாகியிருந்தன, அவை தேர்தல் வழிமுறைகளுக்கு ஏற்ப தேர்தலுக்கு முன்பு மாற்றப்பட்டன. இத்தகைய பழுதுகள் எந்த தேர்தலின்போதும் நடைபெறலாம் என்பதால், இதனைக் கருத்தில் கொண்டு ஒவ்வொரு மாவட்டத்திலும், மாற்று இயந்திரங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன,” என்று கூறினார்.
இந்த காணொளி கடந்த ஆண்டு பஸ்டியில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலுடன் தொடர்புடையதா என்பதை அவரால் உறுதிப்படுத்த முடியவில்லை. இருப்பினும், யாரோ ஒருவர் வேண்டுமென்றே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறைபாடு உள்ளதைப் போன்ற தோற்றத்தை உருவாக்கியுள்ளார் என்று அவர் நமக்குத் தெளிவுபடுத்தினார்.
பீகார் சட்டமன்றத் தேர்தல் கொரோனா தொற்றுநோய்க்கு இடையே நடைபெறும் முதல் பெரிய தேர்தலாகும். இந்த தேர்தலில், வாக்காளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேர்தல் ஆணையம் சிறப்பு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, வாக்காளர்கள் வாக்குப்பதிவு இயந்திரத்தில் பொத்தானை அழுத்துவதற்கு கையுறைகளை அணிய வேண்டும் என்பதால், வாக்குச் சாவடிகளில் ஒவ்வொரு வாக்காளருக்கும் தேர்தல் ஆணையம் கையுறைகளை வழங்கும் என்று கூறப்பட்டுள்ளது. வைரல் காணொளியில் உள்ள இயந்திரத்தில் பொத்தானை அழுத்தும் நபர் கையுறை அணியவில்லை என்பதை எங்களால் காண முடிந்தது.
மேலும் அண்மையில் பீகாரில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதடைந்திருப்பது குறித்தும் எந்த செய்தியும் எங்களுக்கு கிடைக்கவில்லை. இது குறித்து மேலும் அறிந்துகொள்ள, பீகார் கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி சஞ்சய் குமார் சிங்கை நாங்கள் தொடர்பு கொண்டோம். ஆனால் அவரிடமிருந்து எங்களால் எந்த பதிலையும் பெற முடியவில்லை.
இந்த வைரல் காணொளியின் உண்மையான மூலம் குறித்தோ, தோற்றம் குறித்தோ எந்தவொரு கூற்றையும் எங்களால் தெரிவிக்க முடியவில்லை என்றாலும், இந்த காணொளி தற்போதைய பீகார் தேர்தலின்போது எடுக்கப்பட்டது அல்ல என்பதை எங்களின் விசாரணையில் உறுதிப்படுத்த முடிந்தது.
இந்த வைரல் காணொளியை பகிர்ந்த பயனரின் கணக்கினை ஆராய்ந்ததில், அவர் பீகாரின் சீதாமர்ஹியில் வசிப்பவர் என்பதும், பேஸ்புக்கில் அவருக்கு மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்கள் இருப்பதும் தெரியவந்தது.
निष्कर्ष: இந்த வைரல் பதிவு தவறானது. பழுதுள்ள வாக்குப்பதிவு இயந்திரம் எனக் கூறும் காணொளி பழையது மற்றும் அது தற்போது நடைபெறும் பீகார் சட்டமன்றத் தேர்தலில் எடுக்கப்பட்டது அல்ல.
- Claim Review : முதல் கட்ட வாக்களிப்பில், மோசடி தொடங்கியது
- Claimed By : பேஸ்புக் பயனர் எம்.டி.இம்தியாஸ்
- Fact Check : False
Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!
Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.