புதுடெல்லி (விஸ்வாஸ் நியூஸ்): தொலைக்காட்சியில் தீரேந்திர கிருஷ்ண சாஸ்திரியின் உரையை பிரதமர் நரேந்திர மோடி பார்ப்பது போன்று இடம்பெற்றுள்ள காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தீரேந்திர சாஸ்திரியின் உரையின் கதையை பிரதமர் மோடி பார்க்கிறார் என்று சில சமூக ஊடக பயனர்கள் காணொளி ஒன்றைப் பகிர்ந்து வருகின்றனர். விஸ்வாஸ் செய்தி நிறுவனம் நடத்திய விசாரணையில், பிரதமர் மோடியின் வைரலான காணொளி எடிட் செய்யப்பட்ட ஒன்று என்று தெரியவந்தது. உண்மையில் ஜூலை 2019 இல் சந்திரயான்-2 ஏவப்பட்ட நேரலை ஒளிபரப்பை தொலைக்காட்சியில் பிரதமர் மோடி பார்ப்பதை அசல் காணொளி காட்டுகிறது. எடிட்டிங் மென்பொருள் மூலம் தீரேந்திர கிருஷ்ண சாஸ்திரியின் காட்சிகள் இந்த காணொளியில் சேர்க்கப்பட்டுள்ளது.
ன் 4, 2023 அன்று, ‘இந்து அங்கித் பட்நாகர் மாநிலத் தலைவர், அகில இந்திய இந்து மகாசபா’ என்ற முகநூல் பயனர் இந்த வைரல் காணொளியைப் (காப்பக இணைப்பு) பகிர்ந்து கீழ்க்கண்டவாறு தலைப்பு எழுதினார்: “பிரதமர் மோடி ஜி தனது ராம்கதாவின் போது பெற்றோர்கள் குறித்து தீரேந்திர சாஸ்திரி பேசிய காணொளியைப் பார்த்தார்.”
எங்கள் விசாரணையின் போது, இந்த காணொளியின் பின்னணியில் உள்ள உண்மையை வெளிக்கொணர, தொடர்புடைய முக்கிய வார்த்தைகளைப் பயன்படுத்தி கூகுல் தேடலை நாங்கள் மேற்கொண்டோம். இந்த செயல்பாட்டில், ஜூலை 22, 2019 அன்று பிசினஸ் டுடேயின் அதிகாரப்பூர்வ முகநூல் கணக்கில் வெளியிடப்பட்ட அசல் காணொளியை நாங்கள் கண்டுபிடித்தோம். இந்த அசல் காட்சிகள் சந்திரயான்-2 ஏவுதலை பிரதமர் மோடி பார்ப்பதை தெளிவாகக் காட்டுகிறது. ட்வீட்டின் சுருக்கமான உரை விளக்கத்தில், “”டெல்லி: இன்று பிற்பகல் 2:43 மணிக்கு இஸ்ரோவின் #சந்திராயன்2 ஏவுதலின் நேரடி ஒளிபரப்பை பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட்டார் என்று கூறப்பட்டுள்ளது.”
“தூர்தர்ஷன் நேஷனல்” மற்றும் ANI ஆகியவையும் அசல் காணொளியை ஜூலை 22, 2019 அன்று தங்கள் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்குகளில் பகிர்ந்து, அதே தகவலை வழங்குகின்றன.
எங்கள் விசாரணையில், ஜூலை 22, 2019 அன்று ABP நியூஸின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் பதிவேற்றப்பட்ட அசல் காணொளியை நாங்கள் கண்டறிந்தோம். இந்த காணொளியின் விளக்கத்தில், “பிரதமர் நரேந்திர மோடி சந்திரயான்-2 ஏவலின் நேரடி ஒளிபரப்பைப் பார்த்தார் என்று கூறுகிறது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) இந்தியாவின் இரண்டாவது சந்திரப் பயணத்தை ஜூலை 22 அன்று தொடங்கியது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சந்திரயான்-2 ஒரு வாரத்திற்கு முன்பு ஒத்திவைக்கப்பட்டது. ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இது ஏவப்பட்டது, மேலும் இது சந்திரயான்-2 நிலவின் தெற்குப் பகுதியை ஆராயும்.
இதே கூற்றுடன் பிரதமர் மோடியின் மற்றொரு எடிட் செய்யப்பட்ட காணொளியும் பரவி வருகிறது. இது தொடர்பான முக்கிய வார்த்தைகளைப் பயன்படுத்தி அசல் காணொளியை நாங்கள் தேடியபோது, ஜூன் 3, 2023 அன்று பிரதமர் மோடியின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் பதிவேற்றப்பட்ட உண்மையான காணொளியை நாங்கள் கண்டோம். தற்போது கிடைத்துள்ள தகவலின்படி, ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக பிரதமர் மோடி ஆலோசனை நடத்துவதாக தெரிகிறது.
டைனிக் ஜாக்ரனின் நேஷனல் பீரோவின் நிருபர் நீலு ரஞ்சனனை இந்த காணொளி குறித்த அவரின் நுண்ணறிவுக்காக நாங்கள் அவரை அணுகினோம். அந்தக் கூற்று தவறானது என்றும், அந்த காணொளி எடிட் செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் உறுதிப்படுத்தினார். மேலும், கூடுதல் விவரங்களுக்கு பாஜக செய்தித் தொடர்பாளர் விஜய் சோங்கர் சாஸ்திரியை நாங்கள் தொடர்பு கொண்டோம். இந்த காணொளி திருத்தப்பட்டதாகவும், அந்த கூற்று போலியானது என்றும் கூறி அவர் இதை நிராகரித்தார்.
எங்கள் விசாரணை முடிந்ததும், தவறான கூற்றுடன் இந்த காணொளியை பகர்ந்த அந்த பயனரின் சுயவிவரத்தை நாங்கள் ஆய்வு செய்தோம். இந்த பயனர் ஒரு கருத்தியல் குழுவுடன் தொடர்புடையவர் என்றும் அவர் 26,000 நபர்களைப் பின்தொடர்வதையும் நாங்கள் கண்டறிந்துள்ளோம். பயனரின் சுயவிவரம் அவர் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பதைக் காட்டுகிறது.
முடிவுரை: விஸ்வாஸ் நியூஸ், அதன் விசாரணையின் மூலம், தீரேந்திர சாஸ்திரியின் உரையைக் பிரதமர் மோடி கேட்பது போன்ற வைரலான காணொளி எடிட் செய்யப்பட்டது என்று தீர்மானித்தது. ஜூலை 2019-ல் சந்திரயான்-2 விண்ணில் ஏவப்பட்ட நேரலை ஒளிபரப்பை பிரதமர் மோடி தொலைக்காட்சியில் பார்ப்பதை அந்த அசல் காணொளி காட்டுகிறது. எடிட்டிங் மென்பொருளைப் பயன்படுத்தி தீரேந்திர கிருஷ்ண சாஸ்திரியின் காட்சிகள் இந்த காணொளியில் செருகப்பட்டுள்ளன.
Knowing the truth is your right. If you have a doubt on any news that could impact you, society or the nation, let us know. You can share your doubts and send you news for fact verification on our mail ID contact@vishvasnews.com or whatsapp us on 9205270923