உண்மை சரிபார்ப்பு: நீலகிரி மலை இரயில் தனியார்மயமாக்கப்படவில்லை, இந்த வைரல் கூற்று தவறானது

வைரல் பதிவு தவறானது. தெற்கு இரயில்வே துறை நீலகிரி மலை இரயிலை தனியார்மயமாக்கவில்லை.

புதுடெல்லி (விஸ்வாஸ் செய்தி). நீலகிரி மலை இரயில் தனியார்மயமாக்கப்பட்டதாகக் கூறி, இரயிலுக்கு முன்னால் பணியாளர்கள் நிற்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. பல பயனர்களும் அதிகப்படியான கட்டணம் குறித்து, தங்கள் கோபத்தையும், கருத்துகளையும் சமூக ஊடகங்களில் வெளிப்படுத்தி உள்ளனர்.

இந்த கூற்று தவறானது என்று விஸ்வாஸ் செய்தியின் விசாரணையில் தெரியவந்துள்ளது. தனியார்மயமாக்கல் குறித்த கூற்றுக்களை தெற்கு இரயில்வே துறை மறுத்துள்ளதோடு, இந்தப் புகைப்படங்கள் நீலகிரி மலை ரயில்வேயைச் (NMR) சேர்ந்த chartered trip சேவை என்றும் அழைக்கப்படும் இரயிலின் புகைப்படங்கள் என்பதையும் நமக்குத் தெளிவுபடுத்தினர்.

கூற்று

நீலகிரி மலை ரயில் ஒரு தனியார் நிறுவனத்திற்கு விற்கப்பட்டதாகக் கூறி ஒரு ரயில் மற்றும் பணிப்பெண்களின் பல படங்கள் பகிரப்பட்டுள்ளன. திராவிடன் துரை என்ற பேஸ்புக் பயனர், “அரசு துறைகளை தனியாரிடம் ஒப்படைத்தால் என்ன நடக்கும் என்பதற்கு உதாரணம் இது. நீலகிரி மலை இரயில் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டு முதல் பயணம் நேற்று நடந்தது …. பயண கட்டணம் 400ரூபாயிலுருந்து 3000 ரூபாய் வசூலிக்கப்பட்டது .2014 ல் 25 ரூ மற்றும் 100 ரூ . இப்போது???இது ஆரம்பம் தான். சங்கிகள் இந்த தேசத்தை அழிக்க ஆரம்பம் தான் இது .இன்னும் நிறைய இருக்கு.#காங்கிரஸ் உருவாக்கிய எல்லாவற்றையும் #தனியாருக்குவிற்றுஅழிப்பதை தவிர பாஜக வேறெதுவும் செய்வதில்லை…” என்று எழுதியுள்ளார். இந்த பேஸ்புக் இடுகையின் காப்பகப்படுத்தப்பட்ட பதிப்பை இங்கே காணலாம்.

மேலும் ட்விட்டரில் பகிரப்பட்டுள்ள செய்தித்தாள் ஒன்றில் “8 மாதங்களுக்கு பிறகு இயக்கப்பட்ட மேட்டுப்பாளையம்-உதகை மலை இரயில் பயணக் கட்டணம் ரூ.3000” என்று கூறப்பட்டிருந்ததை, எங்களால் காண முடிந்தது.


விசாரணை

இரயில்வே தனியார்மயமாக்கல் என்பது இந்திய இரயில்வே மற்றும் முதலீட்டாளர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும் என்று நிதி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் காந்த் மற்றும் இரயில்வே வாரியத் தலைவர் VK யாதவ் ஆகியோர் கூறியதைத் தொடர்ந்து, மத்திய அரசு 109 ரயில் பாதைகளில் பயணிக்கும், 151 இரயில்களை தனியார்மயமாக்க 12 குழுக்களாகப் பிரித்துள்ளதைப் பற்றிய கட்டுரைகள் இணையத்தில் பகிரப்பட்டு இருப்பதை எங்களால் காண முடிந்தது.

நீலகிரி மலை இரயில் தனியார்மயமாக்கல் குறித்து தமிழில் பல செய்தி அறிக்கைகளை நாங்கள் கண்டறிந்தாலும், இந்த வைரல் கூற்றினை உறுதிப்படுத்தும் இரயில்வே துறையால் வெளியிடப்பட்ட எந்தவொரு அதிகாரப்பூர்வ செய்தியையும் எங்களால் கண்டுபிடிக்க இயலவில்லை.

மேட்டுப்பாளையம் மற்றும் உதகமண்டலம் (ஊட்டி) இடையேயான (NMR) இரயில் பாதையில், இரயில்களை இயக்குவதற்கான அதிகாரத்தைக் கொண்டுள்ள தெற்கு இரயில்வேயின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்திலும், இந்த தனியார்மயமாக்கல் பற்றிய வதந்திகள் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதை எங்களால் காண முடிந்தது. “நீலகிரி மலை இரயில் தனியார் வசமானது என்பது தவறான பதிவு. ரயில்வே துறையின் பாலிசி படி எந்த ஒரு தனி நபர் வேண்டுமானாலும் ஒரு ரெயிலையோ ஒரு இரயில் பெட்டியை full tariff rate (FTR ) என்ற முறையில் ஒரு குழுவிற்கு அல்லது சுற்றுலா ஏற்பாடு செய்வதற்காக அல்லது திருமண நிகிழ்ச்சிகாக பணம் செலுத்தினால் இரயில்வே துறை அவர்களுக்கு ஒரு ரெயிலை அல்லது ஒரு இரயில் பெட்டியை இயக்கும். இது chartered trip என்றும் அழைக்கப்படும். இதற்கு முன்பு ரயில்வே இது போல் பல chartered trip களை இயக்கி உள்ளது,” என்று அப்பதிவு தெளிவுபடுத்துகிறது.

இந்த கூற்றினைச் சரிபார்க்க நாங்கள் தெற்கு இரயில்வே துறை சேலம் பிரிவின் செய்தித் தொடர்பாளர் G மரியா மைக்கேலை தொடர்பு கொண்டு பேசினோம். நம்மோடு ஒரு விளக்க அறிவிப்பைப் பகிர்ந்துகொண்ட அவர், இந்த வைரல் கூற்றுக்களை மறுத்தார். “இந்த வைரல் கூற்று தவறானது. என்.எம்.ஆர் தனியார்மயமாக்கப்படவில்லை. டிசம்பர் 5 மற்றும் 6 ஆம் தேதிகளில் சுற்றுலாப் பயணிகளுக்காக ஒரு தனிப்பட்ட சேவையை மட்டுமே நாங்கள் இயக்கினோம். கொரோனா தொற்றுநோய் காரணமாக தெற்கு இரயில்வே தற்போது வழக்கமான NMR சேவைகளை இயக்கவில்லை,” என்று கூறினார்.

மேலும் தொடர்ந்த அவர், “NMR மீண்டும் செயல்படத் தொடங்கியதும், வழக்கமான கட்டணத்தில் தனது சேவைகளைத் தொடரும்,” என்றார்.

இது குறித்து நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ள ஒரு கட்டுரையில், “ஒரு தனியார் நிறுவனம் இரயிலை வாடகைக்கு எடுத்து NMR பாதையில் ரயில் சேவையினை இயக்கியது… இதன் காரணமாக, வார இறுதியில் இந்த இரயிலில் பயணம் செய்தவர்களிடத்தில், பயணக் கட்டணமாக ஒரு நபருக்கு ரூ.3,000 அந்நிறுவனம் வசூலித்தது. வழக்கமான கட்டணம் முதல் வகுப்பு டிக்கெட்டுக்கு ரூ .600, இரண்டாம் வகுப்புக்கு ரூ .295 ஆகும். இந்த தனியார் நிறுவனம், ரயிலின் ஒரு நாள் வாடகைத் தொகையாக ரூ .4.9 லட்சத்தை இரயில்வே துறைக்கு செலுத்தியுள்ளது இங்கே குறிப்பிடத்தக்கது. மேலும், இந்நிறுவனம் இந்த இரயிலினை TN-43 என பெயரிட்டும், இரயில் பெட்டிகளை வண்ணமடித்தும் உள்ளது. இந்த இரயில் சேவையின்போது லோகோ பைலட் மற்றும் காவலர் பணியில் இரயில்வே துறை ஊழியர்களும், உதவி ஊழியர்கள் பணியில் இந்நிறுவனத்தால் நியமிக்கப்பட்டவர்களும் பணியாற்றினர்,” என்று கூறப்பட்டுள்ளது.

இந்த வைரல் கூற்றைப் பகிர்ந்து கொண்ட பேஸ்புக் பயனரான திராவிடன் துரையின் கணக்கினை ஆராய்ந்ததில், அவர் தமிழ்நாட்டின் திருக்கழுகுன்றத்தைச் சேர்ந்தவர் என்பதும், அவருக்கு பேஸ்புக்கில் 4, 277 நண்பர்கள் மற்றும் 1,915 பின்தொடர்பவர்கள் உள்ளனர் என்பதும் எங்களுக்குத் தெரியவந்தது.

निष्कर्ष: வைரல் பதிவு தவறானது. தெற்கு இரயில்வே துறை நீலகிரி மலை இரயிலை தனியார்மயமாக்கவில்லை.

False
Symbols that define nature of fake news
Know The Truth...

Knowing the truth is your right. If you have a doubt on any news that could impact you, society or the nation, let us know. You can share your doubts and send you news for fact verification on our mail ID contact@vishvasnews.com or whatsapp us on 9205270923

Related Posts
சமீபத்திய போஸ்ட்கள்