உண்மை சரிபார்ப்பு: ஐபிஎல் 2020 க்கு சீன ஸ்பான்சர்கள் இல்லை, வைரல் கூற்று தவறானது
அந்த வைரல் கூற்று தவறானது. ட்ரீம்11 என்னும் இந்திய நிறுவனமே ஐபிஎல் 2020 இன் டைட்டில் ஸ்பான்சர் என்பதும், ஐபிஎல்லில் இந்த ஆண்டு எந்த சீனா ஸ்பான்சர்களும் இல்லை என்பதே உண்மை.
- By: Abbinaya Kuzhanthaivel
- Published: Sep 20, 2020 at 03:07 PM
- Updated: Jul 7, 2023 at 05:09 PM
புது தில்லி (விஸ்வாஸ் நியூஸ்). ஐபிஎல் 2020யினை சீனா ஸ்பான்சர் செய்வதாகக் கூறி சமூக ஊடகங்களில் ஒரு பதிவு அதிகமாய் பகிரப்பட்டு வருகிறது. நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த ஐ.பி.எல்லை மக்கள் யாரும் பார்க்க வேண்டாம் என்றும் இந்த இடுகை வேண்டுகோள் வைக்கிறது.
இது குறித்த விஸ்வாஸ் நியூஸின் விசாரணையில் இந்தக் கூற்று தவறானது என்பது தெரியவந்துள்ளது. ட்ரீம் 11 எனும் இந்திய நிறுவனமே ஐபிஎல் 2020 இன் டைட்டில் ஸ்பான்சராக உள்ளது என்பதும், இந்த ஆண்டு சீன ஸ்பான்சர்கள் யாரும் இல்லை என்பதும் இந்த விசாரணையில் எங்களுக்குத் தெரியவந்தது.
கூற்று
ட்விட்டர் பயனர் ஒருவர் எழுதியுள்ள இடுகையில் “ஐபிஎல் இன்று முதல் தொடங்கிவிட்டது, சீனாவே ஐபிஎல் ஸ்பான்சர் செய்கிறது. அதனால் நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டு மக்கள் இந்த ஐபிஎல்லைப் பார்க்க வேண்டாம்” என்று கூறியுள்ளார். இந்த இடுகையை இங்கே காணலாம்.
பேஸ்புக்கிலும் இதே போன்ற கூற்றுடன் பல பயனர்களும் பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர்.
விசாரணை
இது குறித்து விசாரிக்க, இந்த ஆண்டின் ஐபிஎல் ஸ்பான்சர்கள் பற்றிய செய்திகளை இணையத்தில் தேடினோம். அவ்வாறு தேடியபோது, கால்வான் பள்ளத்தாக்கில் நடைபெற்ற இந்தியா-சீனா மோதலின் காரணமாக, சீன மொபைல் நிறுவனமான விவோ ஐபிஎல் 2020 இன் டைட்டில் ஸ்பான்சர்ஷிப்பிலிருந்து விலகியதை அடுத்து ட்ரீம் 11 ஐபிஎல்லின் டைட்டில் ஸ்பான்சராகி உள்ளது குறித்து எங்களுக்குத் தெரிய வந்தது.
டைனிக் ஜாக்ரானின் ஒரு கட்டுரை, “இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) சீன மொபைல் நிறுவனமான விவோ உடனான ஐபிஎல் 2020 டைட்டில் ஸ்பான்சர்ஷிப் குறித்த ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டுள்ளது. கிழக்கு லடாக்கில் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் ஏற்பட்ட மோதலின் காரணமாகவே 5 ஆண்டுகளுக்கான இந்த ஒப்பந்தம், இரண்டு ஆண்டுகளிலேயே இப்போது முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ” என்று கூறுகிறது.
இருப்பினும், ட்ரீம் 11 சீனாவுடன் தொடர்புள்ள நிறுவனம் என்ற விமர்சனத்தையும் எங்களால் காண முடிந்தது. இது குறித்து தேடியதில் ட்ரீம் 11 முற்றிலும் உள்நாட்டில் உருவாகிய இந்திய நிறுவனம் என்பதை தெளிவுபடுத்தும் பிசினஸ் ஸ்டாண்டர்டு வெளியிட்டுள்ள ஒரு கட்டுரையை எங்களால் காண முடிந்தது.
அக்கட்டுரையில் “ட்ரீம் 11 முழுமையாக இந்தியர்களுக்குச் சொந்தமான நிறுவனம். எங்கள் நிறுவனர்கள், நானூறுக்கும் மேற்பட்ட எங்களின் இந்திய ஊழியர்கள் மற்றும் எங்களது இந்திய முதலீட்டாளர்களான கலாரி கேபிடல் மற்றும் மல்டிபிள்ஸ் ஈக்விட்டி ஆகியோரும் இதில் அடங்குவர். மேலும் எங்களின் ஐந்து முதலீட்டாளர்களில், ஒருவர் மட்டுமே சீனாவைச் சேர்ந்தவர் என்ற போதிலும், அவர் எங்கள் நிறுவனத்தில் மிகச் சிறிய பங்குகளை மட்டுமே கொண்டுள்ளார்,” என்று அந்த நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுவதாகக் குறிப்படப்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் தெளிவுபடுத்திக் கொள்ள ஐபிஎல் 2020 க்கான கோ-ஸ்பான்சர்கள் குறித்து ஆராய்ந்த போது, இது குறித்த ஸ்போர்ட்ஸ்டாரின் கட்டுரையை எங்களால் காண முடிந்தது. அதில் “ட்ரீம் 11, ஃபோன்பே, அமேசான் மற்றும் பைஜுஸ் ஆகியவை ஐபில் 2020ன் கோ- ஸ்பான்சர்களாகவும், பாலிகாப், யுஎஸ்எல், கோகோ கோலா, ஐடிசி ஃபுட்ஸ், மொண்டெலெஸ், கம்லா பசாண்ட், ரம்மி சர்க்கிள், ஏஎம்எஃப்ஐ மற்றும் பி & ஜி ஆகியவை ஐபிஎல் 2020ன் அசோசியேட் ஸ்பான்சர்களாகவும் உள்ளன,” என்று குறிப்படப்பட்டிருந்தது.
இந்தக் கூற்றினைச் சரிபார்க்க டைனிக் ஜாக்ரானின் விளையாட்டு நிருபர் அபிஷேக் திரிபாதியுடன் பேசினோம். இந்தக் கூற்றுக்களை மறுத்த அவர், “இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான எல்லை பதட்டங்கள் காரணமாகவே விவோ வெளியேறியது. ஐபிஎல் 2020 க்கு சீனாவிலிருந்து எந்த ஸ்பான்சர்களும் இல்லை. அந்த வைரல் கூற்று தெளிவற்றது,” என்று கூறினார்.
இந்தக் கூற்றினைப் பகிர்ந்த பல பயனர்களில் பேஸ்புக் பயனர் வேத்பால் யாதவ் ஒருவர். அவரது சுயவிவரத்தினை ஆராய்ந்ததில், அவர் உத்தரபிரதேசத்தின் கெக்ராவைச் சேர்ந்தவர் என்பதும், அக்கணக்கில் அவருக்கு 5,000 நண்பர்கள் இருப்பதும் தெரியவந்தது.
निष्कर्ष: அந்த வைரல் கூற்று தவறானது. ட்ரீம்11 என்னும் இந்திய நிறுவனமே ஐபிஎல் 2020 இன் டைட்டில் ஸ்பான்சர் என்பதும், ஐபிஎல்லில் இந்த ஆண்டு எந்த சீனா ஸ்பான்சர்களும் இல்லை என்பதே உண்மை.
- Claim Review : சீனாவே ஐபிஎல் ஸ்பான்சர்
- Claimed By : பேஸ்புக் பயனர் வேத்பால் யாதவ்
- Fact Check : False
Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!
Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.