புதுடெல்லி (விஸ்வாஸ் நியூஸ்): தமிழகத்தில் பணிபுரியும் பீகார் தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக செய்தித்தாள்கள் மூலம் தகவல் கிடைத்ததாக பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மார்ச் 2 அன்று ட்வீட் செய்தார். இந்த அறிக்கைகளைத் தொடர்ந்து, மாநிலத்தின் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு பீகார் தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறை தலைமை இயக்குநருக்கு அவர் அறிவுறுத்தினார். சமீபத்தில், ஹிந்தி பேசும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. தென்னிந்தியாவில் ரயிலில் நடந்த சம்பவத்தில் இருந்து எடுக்கப்பட்ட காணொளியை ஆதாரமாகக் கொண்டு, இந்த வழக்கில் குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், டைனிக் ஜாக்ரன் வெளியிட்டதாக கூறப்படும் ஒரு செய்தியின் ஸ்கிரீன்ஷாட் ஒன்று சமூக வலைதளங்களில் பல்வேறு தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தி பேசும் மக்களை மார்ச் 20 ஆம் தேதிக்குள் மாநிலத்தை விட்டு வெளியேற வேண்டும் என்றும், இல்லையெனில் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் தமிழக முதல்வர் மிரட்டல் விடுத்ததாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசம், பீகார் மற்றும் ஒடிசாவைச் சேர்ந்த புலம்பெயர்ந்த குடிமக்கள் காலக்கெடுவுக்குப் பிறகு தமிழ்நாட்டில் தங்கினால் உயிரை இழக்க நேரிடும் என்று ஸ்டாலின் கூறியதாக அந்த அறிக்கை கூறுகிறது. அதே வைரலான ஸ்கிரீன்ஷாட்டில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் அறிக்கையும் உள்ளது, அதில் இந்தி பேசும் அனைத்து தொழிலாளர்களையும் அந்தந்த மாநிலங்களுக்குத் திரும்புமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
விஸ்வாஸ் நியூஸ், தனது விசாரணையில், டைனிக் ஜாக்ரன் நாளிதழின் பெயரை தவறாகப் பயன்படுத்தி தவறான செய்திகள் பரப்பப்படுவது கண்டறியப்பட்டது. வைரலாகி வரும் ஸ்கிரீன் ஷாட் ஜாக்ரனில் வெளியான செய்தி அல்ல, மாறாக ஜாக்ரனின் லோகோவைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டது ஆகும். உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் கூறப்பட்டதாக (கேட்டுக் கொள்ளப்பட்டதாக) வைரலான ஸ்கிரீன்ஷாட்டில் காணப்பட்ட அறிக்கைகளும் ஜோடிக்கப்பட்டவை மற்றும் போலியானவை.
தமிழ்நாட்டில் பணிபுரியும் ஹிந்தி பேசும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை மாநிலத்தை விட்டு வெளியேறுமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதாக ஒரு ஸ்கிரீன்ஷாட் சமூக வலைதளங்களில் சுற்றி வருகிறது. டைனிக் ஜாகரன் நாளிதழில் வெளியான செய்தி அறிக்கைதான் இந்தக் கூற்றுக்கு காரணமாக அமைகிறது. ஸ்டாலினின் உத்தரவுக்கு பிறகு, இந்தி பேசும் தொழிலாளர்களை தமிழகத்தை விட்டு வெளியேறுமாறு உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைரலான ஸ்கிரீன்ஷாட்டில் டைனிக் ஜாக்ரனின் லோகோ உள்ளது, இதன் காரணமாக ஜாக்ரானில் இந்த செய்தி வெளியிடப்பட்டதாகத் தெரிகிறது. இந்த ஸ்கிரீன்ஷாட் எடிட்டிங் கருவிகளின் உதவியுடன் தயாரிக்கப்பட்டுள்ளது என்றும், டைனிக் ஜாக்ரனின் எந்தப் பதிப்பிலும் இதுபோன்ற செய்திகள் வெளியிடப்படவில்லை என்றும் எங்கள் விசாரணையில் நாங்கள் கண்டறிந்தோம்.
இந்தச் செய்தியில் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியதாகக் கூறப்படும் அறிக்கையும் புனையப்பட்டது மற்றும் அபத்தமானது. கூடுதல் உறுதிப்படுத்துவதற்காக டைனிக் ஜாக்ரன் உத்தரப்பிரதேச ஆசிரியர் அசுதோஷ் சுக்லாவை விஸ்வாஸ் நியூஸ் தொடர்புகொண்டது. டைனிக் ஜாக்ரனின் லோகோவை தவறாக பயன்படுத்தி போலி செய்திகளை பரப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெளிவுபடுத்தினார். ஜாக்ரனில் அப்படி எந்த செய்தியும் வெளியாகவில்லை.
தமிழ்நாட்டிலிருந்து அனைத்து ஹிந்தி பேசும் தொழிலாளர்களையும் திரும்பி வருமாறு யோகி ஆதித்யநாத் வேண்டுகோள் விடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்ட இதுபோன்ற எந்த அறிக்கையையும் செய்தித் தேடல்களில் கூட, எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த வைரலான செய்தி குறித்து, உத்தரபிரதேச முதல்வரின் ஊடக ஆலோசகர் மிருத்யுஞ்சய் சிங்கை விஸ்வாஸ் நியூஸ் தொடர்பு கொண்டபோது, “இது போன்ற எந்த அறிக்கையையும் முதல்வர் வெளியிடவில்லை” என்றார் அவர்.
அந்த அறிக்கையின்படி, தமிழகத்தில் பீகார் தொழிலாளர்களுக்கு எதிரான வன்முறை தொடர்பாக பீகார் சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை பெரும் அமளி ஏற்பட்டது. 12 தொழிலாளர்கள் இறந்ததாகக் கூறி, ஒரு குழுவை அங்கு அனுப்ப எதிர்க்கட்சித் தலைவர் விஜய் சின்ஹா வேண்டுகோள் விடுத்தார்.
பீகார் சட்டசபையில் ஏற்பட்ட அமளியை தொடர்ந்து, தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் இந்த கூற்றுகளை மறுத்து காணொளி அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
பீகாரில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுவது தவறானது என்றும், சில குண்டர்கள் தவறான காணொளிகளைப் பகிர்வதன் மூலம் மக்களை தவறாக வழிநடத்துவதாகவும் தமிழ்நாடு காவல்துறை பிப்ரவரி 2 ஆம் தேதி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் சுயவிவரத்திலிருந்து காணொளி அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
தமிழக டிஜிபி தனது அறிக்கையில், தமிழ்நாட்டில் இந்தி பேசும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படும் இரண்டு காணொளிகளையும் குறிப்பிட்டுள்ளார். இரண்டு காணொளிகளும் தவறானவை என்று விளக்கமளித்த அவர், இந்த இரண்டு சம்பவங்களிலும், தமிழ்நாட்டு மக்களுக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் இடையே எந்த மோதலும் இல்லை என்று கூறினார்.
விஸ்வாஸ் நியூஸ் தமிழக டிஜிபி அலுவலகத்தை தொடர்புகொண்டு இந்த விவகாரத்தில் எழுப்பப்பட்ட கேள்வியில், டிஜிபி ஏற்கனவே ஒரு அறிக்கையை வெளியிட்டதாகவும், “இந்தி பேசும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மாநிலத்தில் பாதுகாப்பாக உள்ளனர்” என்றும் எங்களிடம் கூறப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக பீகார் காவல்துறை தலைமை இயக்குநரையும் நாங்கள் அணுகியுள்ளோம். அவர்கள் பதிலளிக்கும்போது இதுகுறித்த மேலும் செய்திகள் தெரிவிக்கப்படும்.
முடிவு: தமிழகத்தில் இந்தி பேசும் தொழிலாளர்களை மாநிலத்தை விட்டு வெளியேறுமாறு கோரப்பட்டதாக டைனிக் ஜாக்ரன் லோகோவுடன் வைரலான செய்தி போலியானது. இது எடிட்டிங் கருவிகளின் உதவியுடன் உருவாக்கப்பட்டது. ஜாக்ரானில் இதுபோன்ற செய்திகள் எதுவும் வெளியிடப்படவுமில்லை தமிழ்நாட்டின் முதலமைச்சரோ இந்தி பேசும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை மாநிலத்தை விட்டு வெளியேறும்படி கேட்டுக்கொள்ளவுமில்லை. அதே நேரத்தில், இந்தி பேசும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் மாநிலங்களுக்கு விரைவில் திரும்புமாறு யோகி ஆதித்யநாத் வேண்டுகோள் விடுக்கவுமில்லை. அவரது பெயரில் வைரலாகி வரும் இந்த அறிக்கை புனையப்பட்டது மற்றும் அபத்தமானது.
Knowing the truth is your right. If you have a doubt on any news that could impact you, society or the nation, let us know. You can share your doubts and send you news for fact verification on our mail ID contact@vishvasnews.com or whatsapp us on 9205270923