உண்மை சரிபார்ப்பு: தொலைக்காட்சி விளம்பரங்கள் குறித்த இந்த அறிவிப்பை டெல்லி முதல்வர் வெளியிடவில்லை
இந்த வைரல் பதிவு தவறானது. தில்லி முதல்வர் விளம்பரமில்லா கட்டண தொலைக்காட்சி சேனல்கள் குறித்து இதுபோன்ற எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.
- By: Abbinaya Kuzhanthaivel
- Published: Feb 10, 2021 at 09:54 PM
புது தில்லி (விஸ்வாஸ் செய்தி). பணம் செலுத்தி பார்க்கக்கூடிய தொலைக்காட்சி சேனல்களில் விளம்பரங்கள் இருக்கக்கூடாது என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்ததாக சமூக ஊடகங்களில் ஒரு வைரல் பதிவு கூறுகிறது. சந்தாதாரர்கள் மற்றும் விளம்பர முகவர்களிடமிருந்து ஒளிபரப்பாளர்கள் பணம் கொள்ளையடிப்பதைத் தடுக்கும் நடவடிக்கை இது என்று இந்தப் பதிவு கூறுகிறது.
இந்த கூற்று தவறானது என்று விஸ்வாஸ் செய்தியின் விசாரணையில் தெரியவந்துள்ளது. டெல்லி முதல்வர் குறித்த இந்தக் கூற்றுக்களை ஆம் ஆத்மி கட்சியின் செய்தித் தொடர்பாளர் மறுத்துள்ளார்.
கூற்று
தில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் புகைப்படத்துடன் கூடிய ஒரு பதிவில், “டெல்லி அரசு அதிரடி உத்தரவு. அனைத்து கட்டண சேனல்களுக்கும் விளம்பரம் இருக்கக்கூடாது. அப்படி இல்லை எனில் விளம்பரம் இருக்கும் சேனலில் கட்டணம் கேட்கக்கூடாது. விளம்பரங்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய் சம்பாதிக்கும் சேனல்களுக்கு கட்டணம் கிடையாது என்று கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். இதை நாமும் வரவேற்போம். இதை அனைத்து நண்பர்களுக்கும் ஷேர் பண்ணவும்…” என்று கூறப்பட்டுள்ளது. இந்த இடுகையின் காப்பகப்படுத்தப்பட்ட பதிப்பை இங்கே காணலாம்.
விசாரணை
டெல்லி முதல்வரின் இந்தப் புதிய அறிவிப்பு குறித்த செய்திகளை இணையத்தில் தேடியதில், இதுபோன்ற கூற்றுக்கள் 2019 ஆம் ஆண்டிலிருந்தே சமூக ஊடகங்களில் வைரலாக இருப்பதை நம்மால் காண முடிந்தது.
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) டிசம்பர் 2018 அறிவிப்பில், நீங்கள் தேவையற்ற சேனல்களுக்கு பணம் செலுத்த மாட்டீர்கள் என்று கூறியது. சந்தாதாரர்கள் இப்போது ஒளிபரப்பாளர்களால் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட விலையில் அவர்கள் பார்க்க விரும்பும் சேனல்களைத் தேர்வு செய்யலாம். டிவி பார்ப்பவர்கள் ரூ. 130 + ஜிஎஸ்டி @ 18% (மொத்தம் ரூ. 153) பேஸ் பேக்கில் இணைய வேண்டும். இந்த பேஸ் பேக்கில் 26 தூர்தர்ஷன் சேனல்கள் மற்றும் 500 சேனல்களில் இருந்து 100 சேனல்கள் இலவசமாக தரப்படும்… இந்த பேஸ் பேக்கிற்கு மேல், சந்தாதாரர்கள் தங்கள் சொந்த சேனல்களைத் தேர்ந்தெடுத்து அதற்கேற்ப பணம் செலுத்தலாம் என்று ஃபினான்சியல் எக்ஸ்பிரஸில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரை கூறுகிறது.
இந்த அறிவிப்பிற்கு பின்னரே இந்தக் கூற்று வைரலாகி இருப்பதை எங்களால் அடையாளம் காண முடிந்தது என்றாலும், விளம்பரமில்லாத தொலைக்காட்சி சேனல்கள் குறித்த முதல்வரின் அறிவிப்பு பற்றிய உண்மையான செய்தி அறிக்கை எதையும் எங்களால் கண்டுபிடிக்க இயலவில்லை.
TRAI என்பது முற்றிலும் தனித்தியங்கும் தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டு நிறுவனம் அல்ல என்பதை நாங்கள் கண்டறிந்தோம். TRAI மீது அரசாங்கம் குறிப்பிட்ட அளவிலான கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளது. சட்டத்தின் 25 வது பிரிவின் கீழ், TRAI நிறுவனத்தில் உத்தரவுகள் பிறப்பிப்பதற்கான அதிகாரத்தை அரசாங்கம் கொண்டுள்ளது. TRAI க்கு மத்திய அரசும் நிதியளிக்கிறது. மேலும், TRAI சட்டத்தின் 35வது பிரிவின் கீழ், பல்வேறு சூழ்நிலைகளில் விதிகளை உருவாக்க மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது, மேலும் இதுபோன்ற விதிகளைக் கொண்டே TRAI செயல்பட்டு வருகிறது. எனவே, இதுபோன்ற அறிவிப்புகளைச் செய்ய மாநில அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை.
இதன் உண்மை சரிபார்ப்பிற்காக நாங்கள் ஆம் ஆத்மி கட்சியின் செய்தித் தொடர்பாளர் சுரேல் தில்வேவை தொடர்பு கொண்டு பேசினோம். நம்மிடத்தில் இது குறித்து பேசிய அவர், “இந்த வைரல் கூற்று தவறானது. இதுபோன்ற எந்த அறிவிப்புகளையும் முதலமைச்சர் வெளியிடவில்லை,” என்று கூறினார்.
இந்த வைரல் இடுகையைப் பகிர்ந்த பயனரின் கணக்கினை ஆராய்ந்ததில், அவர் தமிழ்நாட்டின் விருதுநகரில் வசிப்பவர் என்பதும், பேஸ்புக்கில் அவருக்கு 4,353 நண்பர்கள் இருப்பதும் எங்களுக்குத் தெரியவந்தது.
निष्कर्ष: இந்த வைரல் பதிவு தவறானது. தில்லி முதல்வர் விளம்பரமில்லா கட்டண தொலைக்காட்சி சேனல்கள் குறித்து இதுபோன்ற எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.
- Claim Review : டெல்லி அரசு அதிரடி உத்தரவு. அனைத்து கட்டண சேனல்களுக்கும் விளம்பரம் இருக்கக்கூடாது. அப்படி இல்லை எனில் விளம்பரம் இருக்கும் சேனலில் கட்டணம் கேட்கக்கூடாது. விளம்பரங்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய் சம்பாதிக்கும் சேனல்களுக்கு கட்டணம் கிடையாது என்று கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். இதை நாமும் வரவேற்போம். இதை அனைத்து நண்பர்களுக்கும் ஷேர் பண்ணவும்
- Claimed By : பேஸ்புக் பயனர்
- Fact Check : False
Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!
Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.