புதுடெல்லி (விஸ்வாஸ் நியூஸ்). முகத்தில் வளரும் முடி மற்றும் சுவாசக்கருவி குறித்த விளக்கப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனோடு பகிரப்படும் கூற்றானது, கொரோனா வைரஸ் வருவதைத் தவிர்க்க, மக்கள் தங்கள் முகத்தை சவரம் செய்துகொள்ள வேண்டுமென CDC பரிந்துரைப்பதாக கூறுகிறது.
இது குறித்த விஸ்வாஸ் செய்தியின் விசாரணையில், இந்த விளக்கப்படம் இரண்டு ஆண்டுகள் பழையது என்பதும், இதற்கும் கொரோனா வைரஸுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதும் எங்களுக்குத் தெரியவந்தது.
கூற்று
உண்மை சரிபார்ப்பிற்காக நமது வாட்ஸ்அப் சாட்பாட் (+919599299372) மூலமாக இந்த கூற்று நம்மை வந்தடைந்தது. கொரோனா வைரஸ் வருவதைத் தவிர்க்க, மக்கள் தங்கள் முகத்தை சவரம் செய்துகொள்ள வேண்டுமென CDC பரிந்துரைக்கிறது என்ற கூற்றுடன், முகத்தில் வளரும் முடி மற்றும் சுவாசக்கருவி குறித்த விளக்கப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த இடுகை பேஸ்புக்கிலும் வைரலாகியுள்ளது. இதன் காப்பகப்படுத்தப்பட்ட பதிப்பை இங்கே காணலாம்.
விசாரணை
இது குறித்து விசாரிக்க, இந்த வைரல் புகைப்படத்தை கூகுள் தலைகீழ் படத் தேடலை பயன்படுத்தி தேடியதில், நோய்கள் கட்டுப்பாடுகள் மற்றும் தடுப்பு மையங்களின் (CDC) இணையதளத்தில், 2017 நவம்பரின்போது தேசிய தொழில்சார் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்திற்கான நிறுவனத்தை (NIOSH) சேர்ந்தோர் சுவாசக் கருவிகளை அணிவது தொடர்பாக பதிவேற்றப்பட்டிருந்த இடுகையில் இந்த விளக்கப்படமும் பதிவேற்றப்பட்டிருப்பதை நாங்கள் கண்டோம்.
கொரோனா வைரஸ் பரவல் தொடங்குவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே இந்த கிராபிக்ஸ் பகிரப்பட்டுள்ளது என்பதை இதன்மூலம் நாம் அறிய முடிந்தது.
இந்த இடுகையின் மேலே இருந்த ஒரு எச்சரிக்கையில் “2017 ஆண்டு பதிவேற்றப்பட்ட இந்த வலைப்பதிவும், அதன் விளக்கப்படமும் பணியில் சுவாசக் கருவிகளை அணியும் தொழிலாளர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளன. 2019 கொரோனா வைரஸ் நோய் (COVID-19) பற்றிய சமீபத்திய தகவல்களுக்கு, தயவுசெய்து CDC இன் COVID-19 வலைத்தளத்தைப் பார்வையிடவும்,”என்று கூறப்பட்டுள்ளது.
இது குறித்து 2020 பிப்ரவரியில் NIOSH வெளியிட்டுள்ள ட்வீட் ஒன்றில் “@CDCgov தற்போது நிகழ்ந்துவரும் #COVID19 பரவலுக்கு, இந்த சுவாசக் கருவிகளை பயன்படுத்த பரிந்துரைக்கவில்லை. 2017 ஆண்டில் பதிவேற்றப்பட்ட இந்த விளக்கப்படம், காற்றில் பரவும் ஆபத்துகளிலிருந்து தங்களை பாதுகாத்துகொள்வதற்காக சுவாசக்கருவிகளை அணியும் தொழிலாளர்களுக்கானது. முகத்தில் வளரும் முடி இறுக்கத்தை தளர்த்தி, பாதுகாப்பினை குறைக்கும் என்பதால் தான் முகச்சரவம் பரிந்துரைக்கப்படுகிறது,” என்று கூறப்பட்டுள்ளது.
இது குறித்து விசாரிக்க, அப்பல்லோ மருத்துவமனையில் நுரையீரல் நிபுணராக பணிபுரியும் மருத்துவர் நிகில் மோடியுடன் நாங்கள் பேசினோம். நம்மிடத்தில் பேசிய அவர், “கோவிட்-19 முக்கியமாக கோவிட்-19 பாதிக்கப்பட்ட நபரின் இருமல் அல்லது தும்மலின் விளைவாக வெளிவரும் எச்சில்துளிகள் வழி நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பரவுகிறது. ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதை அவரது முகத்தில் வளரும் முடிகள் தீர்மானிப்பதில்லை. ஒருவர் எப்போதும் தான் பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்து நல்ல சுகாதாரத்தை கடைபிடிக்க வேண்டும்,” என்று கூறினார்.
இந்த இடுகையை பேஸ்புக்கில் ஜோயல் வின்சென்ட் பிரவுன் என்ற பயனர் பகிர்ந்துள்ளார். இந்த பயனரின் கணக்கினை ஆராய்ந்ததில், அவர் வெர்ஜீனியாவைச் சேர்ந்தவர் என்பதை நாங்கள் கண்டறிந்தோம்.
முடிவு: இல்லை, கொரோனா வைரஸைத் தடுக்க முகத்தில் வளரும் முடி குறித்த வழிகாட்டுதல்களை CDC வெளியிடவில்லை. இந்த வைரல் விளக்கப்படம் பழையது மற்றும் கோவிட்-19 உடன் தொடர்பற்றது.
பொறுப்புத்துறப்பு: CoronavirusFacts எனும் தரவுத்தளம் கோவிட்-19 பரவலின் தொடக்கத்திலிருந்து வெளிவரும் தகவல்களின் உண்மை-சரிபார்ப்புகளை பதிவு செய்து வருகிறது. கொரோனா தொற்றுநோயும் அதன் விளைவுகளும் தொடர்ந்து மாறுபட்டுக் கொண்டே வருவதோடு மட்டுமல்லாது, சில வாரங்கள் அல்லது சில நாட்களுக்கு முன்பு துல்லியமாக இருந்த தரவுகளே கூட மாறிபோகக்கூடிய சூழ்நிலையும் தற்போது உள்ளது. அதனால் ஓர் செய்தியை நீங்கள் பகிர்வதற்கு முன்பு, அச்செய்தி எந்த நாளில் உண்மைச் சரிபார்ப்பு செய்யப்பட்டுள்ளது என்பதை அறிந்து, அதற்கு பின்னர் பகிரவும்.
Knowing the truth is your right. If you have a doubt on any news that could impact you, society or the nation, let us know. You can share your doubts and send you news for fact verification on our mail ID contact@vishvasnews.com or whatsapp us on 9205270923