புது தில்லி (விஸ்வாஸ் நியூஸ்): காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட்டின் ‘ஜன் சங்கர்ஷ் பத் யாத்ரா’ முடிவுக்கு வந்திருக்கலாம், ஆனால் அவரது யாத்திரை குறித்த போலிச் செய்திகளும், தவறான பதிவுகளும் இணையத்தில் இன்னும் உலா வந்த வண்ணமே உள்ளன. பெரும் மக்கள் கூட்டம் ஒன்று காங்கிரஸின் கொடியுடன் நடக்கும் காணொளி ஒன்று வைரலாகி வருகிறது. இந்த காணொளி ராஜஸ்தானில் சச்சின் பைலட்டின் ஜன் சங்கர்ஷ் பத் யாத்ராவில் இருந்து எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும், விஸ்வாஸ் நியூஸ் இந்த இடுகையை பற்றி விசாரித்தபோது, இந்த கூற்று தவறானது என்பது தெரிய வந்தது.
இந்த விசாரணையில், வைரலான இந்த காணொளியானது, கடந்த ஆண்டு டிசம்பரில் நடந்த ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்ராவின் ராஜஸ்தான் பகுதியின் காணொளி என்பது கண்டறியப்பட்டது. பாரத் ஜோடோ யாத்திரையின் போது, ராகுல் காந்தி தௌசாவில் உள்ள காந்தி சர்க்கிள் வழியாகச் சென்றார். அதே வேளையில், சச்சின் பைலட் தனது ஜன் சங்கர்ஷ் பத் யாத்திரையை அஜ்மீரிலிருந்து ஜெய்ப்பூருக்கு மேற்கொண்டார், அது தௌசா வழியாக வரவே இல்லை.
வீர் குர்ஜார் சேனா என்ற ட்விட்டர் பக்கத்தில் மே 11 அன்று ஒரு காணொளியை (காப்பக இணைப்பு) ட்வீட் செய்து, “மூவர்ணக் கொடியை கைகளில் பிடித்துக் கொண்டு, ஊழலுக்கு எதிரான பாரத் மாதா கி ஜெய் என்ற பிரகடனத்துடன் வெகுஜனப் போராட்டம் தொடங்குகிறது என்று எழுதினார். பைலட் ஜன் சங்கர்ஷ் யாத்ராவில் ராஜஸ்தான் ஒன்றுபட்டது. மற்ற பயனர்களும் வைரலான இந்த காணொளியை சச்சின் பைலட்டின் யாத்திரை என்று தவறாக நினைத்து அதை வைரலாக்கி வருகின்றனர்.
விஸ்வாஸ் நியூஸ் முதலில் ட்விட்டர் கணக்கில் உள்ள வீர் குர்ஜார் சேனாவின் இந்த காணொளிகள் மற்றும் கருத்துகளை ஆய்வு செய்யத் தொடங்கியது. 30 வினாடிகள் கொண்ட இந்த காணொளியில் பெரும் கூட்டம் ஒன்று காணப்பட்டது. ஒரு பயனர் அதை போலி காணொளி என்று விவரித்து, இந்த காணொளி தௌசாவில் இருந்து எடுக்கப்பட்ட காணொளி என்று எழுதிய கருத்தை நாங்கள் கண்டோம். பின்னர், விஸ்வாஸ் நியூஸ் கடந்த சில மாதங்களில் தௌசாவில் அரசியல் பேரணிகள் ஏதாவது நடந்துள்ளதா என்பதை அறிய கூகுளில் ஒரு தேடுதல் வேட்டையை மேற்கொண்டது. தேடுதலின் போது, ராகுல் காந்தியின் ‘பாரத் ஜோடோ யாத்ரா’ டிசம்பர் மாதம் தௌசாவில் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தவிர, பிப்ரவரி 2023 இல், பிரதமர் மோடி டெல்லி-மும்பை விரைவுச் சாலையின் முதல் பகுதியை தௌசாவில் திறந்து வைத்தார். திறந்து வைத்த பிறகு, தௌசாவில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்திலும் பிரதமர் மோடி பேசினார்.
விசாரணையை மேற்கொண்டு, விஸ்வாஸ் நியூஸ், ‘பாரத் ஜோடோ யாத்ரா இன் தௌசா’ போன்ற முக்கிய வார்த்தைகளின் உதவியுடன் ட்விட்டரில் அசல் காணொளியைத் தேட முயற்சித்தது. ஹிதேந்திர பித்தாடியா மற்றும் ராதே மீனா ஆகியோர் டிசம்பர் 16, 2022 அன்று காணொளியை பதிவிட்டு, அதை தௌசாவின் பாரத் ஜோடோ யாத்ரா என்று விவரித்தனர்.
ராதே மீனா, ராஜஸ்தான் வேலையில்லா இளைஞர் கூட்டமைப்பின் மாநிலத் தலைவராக உள்ளார். வைரலான காணொளியானது 2022 டிசம்பர் 16 அன்று தௌசா ரயில் நிலையம் அருகே காந்தி சர்க்கிளில் நடந்த ராகுல் காந்தியின் ‘பாரத் ஜோடோ யாத்ரா’வின் காணொளி என்பதை அவர் விஸ்வாஸ் நியூஸிடம் உறுதிப்படுத்தினார். பாரத் ஜோடோ யாத்ரா மீனா உயர் நீதிமன்ற நங்கல் பியாரிபாஸில் இருந்து கிரிராஜ் மந்திர் தௌசாவுக்கு நகர்ந்து சென்ற போது இந்த காணொளி எடுக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். சச்சின் பைலட்டின் தற்போதைய யாத்திரைக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
விசாரணையை மேற்கொள்ளும்போது விஸ்வாஸ் நியூஸ் கூகுள் எர்த் கருவியையும் பயன்படுத்தியது. தௌசாவின் காந்தி சர்க்கிளில் தேடியபோது, வைரலான காணொளியைப் போன்றே சாலைகள், கட்டிடங்கள் மற்றும் மின்விளக்கு கம்பங்கள் இருப்பதைக் கண்டோம். இந்த இரண்டு காணொளிலும் வெள்ளை நிற கட்டிடமும் மின்விளக்குக் கம்பமும் ஒரே மாதிரியாக இருப்பதை கீழே உள்ள படத்தில் தெளிவாகக் காணலாம்.
அடுத்த கட்ட விசாரணையில், காங்கிரஸின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலை ஸ்கேன் செய்து, தௌசாவில் நடைபெற்ற ‘பாரத் ஜோடோ யாத்ரா’ வீடியோக்களைத் தோண்டி எடுக்க ஆரம்பித்தோம். சற்று நேரத்திற்கு பிறகு, வைரலான காணொளியிலும் தெரியும் விதமான ஒரு வெள்ளை நிற கட்டிடத்தின் சிறுபடத்தை (தம்ப்நெயில்) நாங்கள் கண்டோம். இது தவிர, வைரலான காணொளியில் இரண்டு வாகனங்கள் ஒன்றாக ஓடுவதும் பாரத் ஜோடோ யாத்ராவின் காணொளியிலும் காணப்பட்டது. சச்சின் பைலட்டின் சமீபத்திய பாத யாத்திரை என வைரலாகி வரும் காணொளி ராகுல் காந்தியின் ‘பாரத் ஜோடோ யாத்ரா’வின் பழைய காணொளி என்பது இதுவரை நடந்த விசாரணையில் நிரூபணமாகியுள்ளது.
விசாரணையை முன்னெடுத்துச் செல்லும் விஸ்வாஸ் நியூஸ், அஜ்மீரில் வெளியிடப்பட்ட டைனிக் பாஸ்கரின் இ-பேப்பரை ஆய்வு செய்தது. மே 11 பதிப்பில், சச்சின் பைலட்டின் பாத யாத்திரை தொடர்பான செய்திகள் எங்களுக்கு கிடைத்தது. மே 11 முதல், பைலட்டின் ‘ஜன் சங்கர்ஷ் பத் யாத்ரா’ அஜ்மீரில் இருந்து தொடங்கும் என்று அந்த அறிக்கை கூறுகிறது.
ஊழலுக்கு எதிராக இந்த யாத்திரை நடத்தப்பட்டது. மே 15 அன்று ஜெய்ப்பூரில் இந்த யாத்திரை நிறைவடைந்தது. மே 15 அன்று டைனிக் ஜாக்ரனின் யூடியூப் சேனலில் சச்சின் பைலட்டுடன் ஒரு பெரிய கூட்டம் நடந்து செல்வதைக் காணும் பாத யாத்திரை தொடர்பான காணொளி ஒன்றும் பதிவேற்றப்பட்டது.
விசாரணையின் முடிவில், வீர் குர்ஜார் சேனா என்ற ட்விட்டர் கணக்கின் சமூக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த கணக்கு ஆகஸ்ட் 2021 இல் உருவாக்கப்பட்டது என்பது கண்டறியப்பட்டது. 9,000க்கும் மேற்பட்ட நபர்கள் இந்த கணக்கைப் பின்தொடர்கின்றனர்.
முடிவுரை: விஸ்வாஸ் நியூஸின் விசாரணையில் வைரலான இந்த பதிவு தவறானது என்று கண்டறியப்பட்டது. ராகுல் காந்தியின் ‘பாரத் ஜோடோ யாத்ரா’வின் பழைய காணொளியை சச்சின் பைலட்டின் ‘ஜன் சங்கர்ஷ் யாத்ரா’ என்ற கூற்றுடன் பகிரப்பட்டு வருகிறது.
Knowing the truth is your right. If you have a doubt on any news that could impact you, society or the nation, let us know. You can share your doubts and send you news for fact verification on our mail ID contact@vishvasnews.com or whatsapp us on 9205270923